தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – வரும் 17 அன்று இறுதி விசாரணை?
Tamil Nadu Assembly Speaker Issues Notices : அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நவம்பர் 17, 2026 அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்றும்
சென்னை, நவம்பர் 8 : அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் (JCD Prabhakar) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக நவம்பர் 17, 2026 அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
கடந்த 2026 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் கட்சியின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய 4 பேரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவைய ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய 2 பேரும் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 4 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை சட்டப் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டது செல்லும் என்றும், அவர்களின் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீது 2 மாதங்களில் சட்டமன்ற தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் நவம்பர் 17 அன்று இறுதி விசாரணை
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சட்டமன்ற தலைவர் ஜேசிடி பிரபாகர், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி, 4 பேரிடமும் வரும் நவம்பர் 10, 2026 முதல் 3 நாட்களுக்கு அவர் விசாரணை நடத்தவுள்ளார். இந்த விசாரணையின்போது, ராஜினாமா செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பு வழக்கறிஞர்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக உள்ளனர். இதனையடுத்து வருகிற நவம்பர் 17, 2026 அன்று இறுதி விசாரணை நடைபெற்று, அதன் பிறகு சட்டமன்ற தலைவர் ஜேசிடி பிரபாகர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் 17, 2026 அன்று இறுதி விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.