17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. பெண்கள் பாதுகாப்பு, இரு மொழி கொள்கை, கடன் சுமை.. ஆளுநர் உரையில் இடம்பெற்ற விஷயங்கள்..
தமிழக வெற்றிக் கழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என ஆளுநர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜூன் 18, 2026: தமிழக சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர், “வணக்கம்” என தமிழில் தனது உரையைத் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். தனது உரையில், ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்ற அறிஞர் அண்ணாவின் கருத்தையும், டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளையும் மேற்கோள் காட்டினார்.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பாராட்டு:
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற கருத்து தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே மக்களின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாதி, மதம், இனம், பண பலம் ஆகியவற்றைக் கடந்து மக்கள் இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறிய அவர், 1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தைப் போல, 2026ஆம் ஆண்டு விஜய் புதிய அரசியல் புரட்சியை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்:
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். ஓசூர், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதிநிலை:
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் நிதிநிலையை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி இருந்தபோதிலும், தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத்தின் சொந்த வருவாய் முந்தைய நிதியாண்டுகளை விட குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு:
டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலை தடுத்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மீட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புக்காக சிறப்பு படைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு.. முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 5வது இடத்தில் இபிஎஸ்!
சமூக நீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு:
மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை தமிழக வெற்றிக் கழக அரசின் அடிப்படைக் கொள்கைகள் என ஆளுநர் கூறினார். இந்தக் கொள்கைகளை முன்னிறுத்தியே அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருமொழிக் கொள்கை தொடரும்:
தமிழக வெற்றிக் கழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என ஆளுநர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபரின் மீதான சராசரி கடன் சுமை ரூ.3 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.