பசிபிக் பெருங்கடலில் உருவானது சூப்பர் எல் நினோ.. இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
ஏற்கனவே எல் நினோ குறித்து பல்வேறு ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதன் தீவிரம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3.5 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6, 2026: பசிபிக் பெருங்கடலில் நிலவி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு தற்போது சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்திலேயே சூப்பர் எல் நினோ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் நவம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கணிப்பில், நவம்பர் மாதத்தில் எல் நினோவின் தீவிரம் 3.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடும் என்றும், இது உலகளாவிய காலநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ:
உலகின் பரப்பளவில் மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமித்துள்ள பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றம், உலகம் முழுவதும் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், எல் நினோவின் தாக்கத்தால் இந்த ஆண்டும் ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை நிலவியது.
குறிப்பாக, சில பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதால், சாலைகளில் உள்ள தார் உருகும் நிலை ஏற்பட்டது. மேலும், கடுமையான வெப்ப அலை காரணமாக பல உயிரிழப்புகளும் பதிவாகின. அதேபோல், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், பசிபிக் பெருங்கடலில் எல் நினோ தற்போது சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் உலகளாவிய வானிலை அமைப்பை தலைகீழாக மாற்றக்கூடும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
Also Read: ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கொட்டப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான வெப்ப அலை:
இதன் தாக்கத்தால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
சூப்பர் எல் நினோ தாக்கம் கடுமையாக இருக்கும்:
A record breaking Super El Nino is likely to reach more than 3.5°C by November.
This would be the strongest such event ever observed on Earth, and the first time in recorded history that a Super El Nino has emerged in the month of August.#Superelnino #SuperElNino https://t.co/G7fbDQV9b8
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) August 6, 2026
ஏற்கனவே எல் நினோ குறித்து பல்வேறு ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதன் தீவிரம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3.5 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கடுமையான வெப்பநிலை மாற்றங்கள் பதிவாகி வருகின்றன. கோடை காலத்தில் பல மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. மேலும், தற்போது தென்மேற்கு பருவமழை நடைபெற்று வந்தாலும், அதன் தீவிரம் இன்னும் முழுமையாக இல்லாததுடன், இயல்பை விட குறைவான மழையே பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூப்பர் எல் நினோ தொடர்ந்து தீவிரமடைந்தால், 2027ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.