எடப்பாடி vs சி.வி.சண்முகம்.. அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன? பரபரக்கும் தமிழக அரசியல்!!
தன் மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்ததாகவும், ஆனால் எடப்பாடி தனது 'சர்வே' முடிவுகளைக் காரணம் காட்டி அதைத் தன்னிச்சையாக நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெரும் பிளவைச் சந்தித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீது கடுமையான புகாரை முன்வைத்தார். தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சிலருக்கு 6 அமைச்சர் பதவிகள் மற்றும் 10 வாரியத் தலைவர் பதவிகள் தருவதாக ஆசை வார்த்தை கூறி, விஜய் அரசு அவர்களைத் தன் பக்கம் இழுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க : அதிமுகவில் அதிரடி மாற்றம்.. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி காலி… எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்சன்!
26 பேரின் கட்சிப் பதவிகளை பறித்த இபிஎஸ்:
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரைக் கூறி வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், கட்சித் தலைமைக்குத் துரோகம் இழைத்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். கட்சித் தலைமையின் உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். அதன்படி, நத்தம் விஸ்வநாதன் (துணை பொதுச்செயலாளர்), எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. பதவி பறிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக பசுபதி, வேலுசாமி உள்ளிட்ட 17 புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி நியமித்துள்ளார்.
இபிஎஸ்-க்கு எதிராகச் சீறிய சி.வி.சண்முகம்:
தன் மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்ததாகவும், ஆனால் எடப்பாடி தனது ‘சர்வே’ முடிவுகளைக் காரணம் காட்டி அதைத் தன்னிச்சையாக நிராகரித்ததாகவும் தெரிவித்தார். அதிமுக தற்போது எடப்பாடியின் குடும்பப் பிடியில் சிக்கிவிட்டதாகக் கூறிய அவர், அமித்ஷா முன்னிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது எடப்பாடி யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை என்றும் பகிரங்கமாகச் சாடினார். பொதுக்குழுவைக் கூட்டக் கோரிய பிறகு எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரமில்லை; எதைத் தடுத்தாலும் நாங்கள் பொதுக்குழுவில் பங்கேற்போம் எனச் சவால் விடுத்தார்.
சட்ட ரீதியான மோதல்: தகுதி நீக்கக் கோரிக்கை:
அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் இன்பதுரை ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஒரு மனுவை அளித்துள்ளனர். கட்சியின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி எந்த அதிகாரத்தில் அவர்களுக்குச் சீட் வழங்கினாரோ, அதே அதிகாரத்தில் தான் அவர்களைப் பதவியிலிருந்தும் விடுவித்துள்ளார் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்தார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, வரும் காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும்:
இதனிடையே, திமுகவுடன் கூட்டணி என்பதை கனவிலும் நினைக்கக் கூடாது; அதிமுகவின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கு நான் தயார் என சசிகலா தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும், சசிகலா, டிடிவி தினகரன் அனைவரையும் இணைக்க வேண்டுமென தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. இதன் மூலம் மீண்டும் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணையும் வாய்ப்பு அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதோடு, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, வரும் காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை