எஸ்ஐஆர்: 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!
SIR draft voters list: சரியாக தகவல் அளிக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 வகை ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய தகுந்த சான்றுகளை வாக்காளர் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 28: தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்காக, மாநிலம் முழுவதும் 1,255 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீரமைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive revision) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பீகாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது 2வது கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வருகிறது. அதன்படி,தமிழகத்தில் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : இது இருந்தால் தான் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படும்.. புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்..
தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள்:
அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக மீண்டும் சேர்வதற்கு மற்றும் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக மீண்டும் சேர ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ம் தேதி வரை படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.




10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்:
அதேசமயம், சரியாக தகவல் அளிக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 வகை ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய தகுந்த சான்றுகளை வாக்காளர் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிபட்டியலில் தகுதியானவர்கள் பெயர்:
ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், தகுதியானவர்களின் பெயர்கள் இறுதி பட்டியலில் சேர்க்கப்படும். அதோடு, வெளிப்படத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்நடைமுறை குறித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கோவையில் மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற முயன்று பலியான சிறுமி…மத்திய அரசு அளித்த வெகுமதி!
இதனிடையே, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் சரிபார்ப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முழு வீச்சில் இறங்கி பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.