இது இருந்தால் தான் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படும்.. புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்..
SIR Form 6: படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது, 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்றுகளில் ஒன்றாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 27, 2025: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில், டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், பெயரை மீண்டும் சேர்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், படிவம் 6 பூர்த்தி செய்து பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும், இதில் தற்போது புதிய சவால்கள் உருவாகியுள்ளன.
அதாவது, முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலும், 2002 அல்லது 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் போது பெற்றோர் அல்லது உறவினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் பெயர்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய வாக்காளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மேலும் படிக்க: பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!
SIR பணிகள்:
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் ஒருபுறம் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும் படிக்க: அப்போ திருச்செந்தூர்.. இப்போ திருத்தணி.. ‘ரீல்ஸ்’ மோகத்தால் கோவில்களுக்கு வந்த புது சோதனை!!
இரட்டை வாக்குப் பதிவுகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்களே நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதே சமயம், மீண்டும் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்:
படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது, 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்றுகளில் ஒன்றாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது. துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக் காலத்தில் இந்தச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்:
இந்த நிலையில், பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6 சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் கட்டாய அறிவிப்பு (Declaration) படிவத்தையும் இணைக்க வேண்டும் என்றும், அது இணைக்கப்படாவிட்டால் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கட்டாய அறிவிப்பு புதியதல்ல என்றும், சமீபத்தில் முடிவடைந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை இது நெருக்கமாக ஒத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், புதிய வாக்காளர்கள் படிவம் 6 சமர்ப்பிக்கும் போது கூடுதல் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.