AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகாஷ் காவல் மரணம்: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

Akash Custodial Death Case: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவலில் எடுப்பதற்கு முன் அவர் அளித்த வாக்குமூலத்தில் போலீசார் தாக்கியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

ஆகாஷ் காவல் மரணம்: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்
ஆகாஷ் காவல் மரணம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Mar 2026 16:04 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கால்முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததால் பல்வேறு தரப்பினரும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த மரணம் குறித்து உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

உறவினர்களின் போராட்டம் மற்றும் கோரிக்கைகள்

போலீசார் தாக்கியதில் தான் ஆகாஷ் காயமடைந்ததாக கூறி, அவரது உயிரிழப்புக்கு காரணமாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையில் ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை வழக்கின் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலம்

இந்த நிலையில் ஆகாஷை போலீசார் காவலில் எடுப்பதற்கு முன்பாக அவர் கொடுத்த வாக்குமூலத்தின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாக்குமூலத்தில் ஆகாஷ், “சீருடையில் இல்லாத 10 போலீசார் வெள்ளை துணியால் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Also Read: கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி

தாக்குதல் குறித்த ஆகாஷின் விளக்கம்

அந்த வாக்குமூலத்தில் ஆகாஷ், “சீருடையில் இல்லாத 10 போலீசார் வெள்ளை துணியால் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றனர். அங்கு என்னை உட்கார வைத்து எனது கெரண்ட காலிற்கு கீழேயும், முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து ரத்தம் வந்தது. வலியில் துடித்தேன். கண்ணை கட்டி இருந்ததால், என்னை யார் அடித்தார்கள் என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம்

மேலும் தனது வாக்குமூலத்தில், “பின்னர் கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு என்னை மிரட்டினர்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் வழக்கின் தீவிரத்தையும், விசாரணையின் அவசியத்தையும் மேலும் வலியுறுத்துகிறது. தற்போது இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. காவல் மரணம் தொடர்பான இந்த வழக்கில் உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

Follow Us