கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
Sekar Babu slams eps: அதிமுகவை அழித்து பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பும் அனைவரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்குவது சரியாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை, நவம்பர் 01: எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அதிமுகவை அழித்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து இபிஎஸ் நேற்றைய தினம் நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது ஏற்புடையதல்லை என அதிமுக நிர்வாகிகள் கூட விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக வலுவடைய வேண்டும் என்பதே செங்கோட்டையனின் கோரிக்கையாக இருக்கும்போது, அதற்கு செவிமடுக்காமல், அவரை கட்சியில் இருந்து நீக்குவது சரியாக இருக்காது என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர் துயரம்: தீவிரமெடுக்கும் விசாரணை.. சம்பவ இடத்தில் சிபிஐ!!
ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன்:
முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நேற்று முன்தினம் (அக்.30) நடந்தது. அதில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படையாக தோன்றியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்:
ஏற்கெனவே, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்ததற்காக அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் மட்டுமே அவர் உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் வெளிப்படையாகவே தோன்றினார். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைய வேண்டுமென்ற அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்காத இபிஎஸ், நேற்றைய தினம் (அக்.31) அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அவரது இந்த முடிவுக்கு கட்சியின் உள்ளேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதையும் படிக்க : இரவோடு இரவாக தவெக தலைமை அலுவலகத்திற்கு ஓடோடி வந்த புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணம்!!
அதிமுகவை அரிக்கும் இபிஎஸ்:
அந்தவகையில், செங்கோட்டையனை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார். அதாவது, எடப்பாடி பழனிசாமி தனது செயல்பாடுகளால் அதிமுகவை அழித்து பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதை உண்மையான அதிமுகவினர் உணர்ந்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.



