கரூர் துயரம்: தீவிரமெடுக்கும் விசாரணை.. சம்பவ இடத்தில் சிபிஐ!!
Karur tragedy case: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான முதற்கட்ட விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் இடந்த இடத்திற்கு நேரில் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள் தமிழக காவல்துறையினரிடம் விஜய் பேருந்து எங்கு நின்றது, மக்கள் கூட்டம் எவ்வளவு இருந்தது என விரிவாக கேட்டறிந்து வருகின்றனர்.
 
                                கரூர், அக்டோபர் 31: கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கரூர், வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாட்சியங்கள் பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், 4 பேர் ஆஜராகியுள்ளனர். சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து, வேலுசாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்கள் தொடர்பாக சாட்சியங்களையும் சிபிஐ கூடுதல் எஸ்.பி முகேஷ் குமார் பெற்று வருகிறார்.
கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் எது?:
அந்தவகையில், இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் எது? எந்த தகவல் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்றார் என்றும் விசாரணை நடக்கிறது.
Also read: இரவோடு இரவாக தவெக தலைமை அலுவலகத்திற்கு ஓடோடி வந்த புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணம்!!
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து முதலில் தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதே பல்வேறு தரப்பினரும் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளைக் கூற ஆரம்பித்தனர். இந்தநிலையில், கரூர் சம்பவத்தை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணை கோரிய தவெக:
அதேசமயம், தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, கரூர் சம்பவத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதோடு, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.
Also read: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!
தொடர்ந்து, தமிழக போலீசார் வசம் இருந்து வழக்கை பெற்றுக்கொண்ட சிபிஐ ஏற்கெனவே, தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், ஏ1 ஆக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 ஆக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஏ3 ஆக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரையும் இணைத்தது. அதோடு, வழக்கு குறித்து தமிழக போலீசாரிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தது.
தற்போது சிபிஐ-யின் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதையொட்டி, அங்கு சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் நேரில் சென்ற அதிகாரிகள், தமிழக காவல்துறையினரிடம் கூட்டநெரிசல் குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    