இரவோடு இரவாக தவெக தலைமை அலுவலகத்திற்கு ஓடோடி வந்த புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணம்!!
Bomb threat to tvk head office: ஏற்கனவே, தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, அப்போதும் அதிகளவிலான போலீசார் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டு அந்த மிரட்டல் போலி என்று கண்டறிந்தனர். அதேபோல், தற்போது தவெக தலைமை அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
                                சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் தவெக தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல முக்கிய பிரபலங்களின் வீடுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் இதுபோன்று மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிக்கவும் முடியாமல், பொருட்படுத்தாது கடந்துச் செல்லவும் முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.




தொடர் வெடிகுண்டு மிரட்டல்:
தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. அதுபோன்ற மிரட்டல்கள் டிஜிபி அலுவலகத்திற்கோ, சம்மந்தப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையிலோ இமெயில் மூலம் அனுப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினரும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also read: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!
அந்த வகையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. நள்ளிரவில் டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அடுத்த 30 நிமிடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் அக்கட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
கட்சி அலுவலகத்திற்கு ஓடோடி வந்த ஆனந்த்:
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்ககு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரவோடு இரவாக தலைமை அலுவலகத்திற்கு ஆனந்த் பதறி ஓடோடி வந்தார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
Also read: கூட்டணி பேச்சுவார்த்தை.. சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி ராமதாஸ்!!
தொடர்ந்து, போலீசாருடன் சேர்ந்து அவர்கள் அனைத்து அறைகளையும் திறந்து காட்டியதோடு, அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விஜய்யின் பிரச்சார பேருந்தையும் திறந்து காட்டினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பனையூரில் சில மணி நேரங்களாக பரபரப்பு ஏற்பட்டது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    