Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவின் ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

CBI summons tvks Anand, Nirmal Kumar: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், விசாரணை தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. இன்று காலை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மீது சிபிஐ எஃப்ஐஆர் தாக்கல் செய்த நிலையில், தற்போது அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

தவெகவின் ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Oct 2025 23:40 PM IST

சென்னை, அக்டோபர் 26: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் கடந்த செப்.27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களையும் கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர்.

தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதே சமயம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இதனிடையே, வழக்கை எதிர்த்து தவெக சார்பில் சிபிஐ விசாரிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழுவையும் கலைக்க உத்தரவிட்டதோடு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

மேலும் படிக்க: 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

இந்த தீர்ப்பை தவெகவினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என கொண்டாடி வந்த நிலையில், தமிழக போலீசார் வசம் இருந்து வழக்கை பெற்றுக்கொண்ட சிபிஐ ஏற்கெனவே, தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்ததன் அடிப்படையிலேயே, 1 ஆக கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், ஏ2 ஆக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஏ3 ஆக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரையும் இணைத்தது. அதோடு, வழக்கு குறித்து தமிழக போலீசாரிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்துள்ளது.

அதோடு, சம்பவம் நடந்த இடத்திலும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கரூர் கூட்டம் நடக்க முக்கிய காரணமாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் நாளை மறுநாள் கரூரில் நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கும்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், எவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்திருந்தீர்கள், சம்பவம் நடந்த இடத்தை தேர்வு செய்தது எப்படி போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படலாம்.

மேலும் படிக்க: அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

இந்த துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் 30 நாள் ஆக உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தற்போது வரை சந்திக்காத விஜய், நாளை அவர்களை சென்னைக்கு வரவழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். ஏற்கெனவே, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்த அவர், அதனையும் நேரில் சந்தித்து கொடுக்காமல் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இதனால், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான விஜய், கடந்த 30 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் விஜய் அங்கிருந்தபடியே, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.