“செங்கோட்டையனை நீக்கியது சிறுபிள்ளைத்தனம்” – எடப்பாடியை விளாசிய சசிகலா!
Sasikala Condemns eps: அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அதிமுகவை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு, வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, நவம்பர் 01: அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது சிறுபிள்ளைத்தனமான செயல் என்றும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயல் எ்ன எடப்பாடி பழனிசாமியை சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நேற்று முன்தினம் (அக்.30) நடந்தது. அதில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படையாக தோன்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
மூவரும் கூட்டாக பேட்டி:
தொடர்ந்து, மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். அதோடு, தங்களது எதிரி எடப்பாடி பழனிசாமி என்றும் துரோகி என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதிமுக கட்சியில் இருந்துகொண்டே செங்கோட்டையனும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு மத்தியில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் உள்ள அவர் மீது எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்டது. இதனிடையே, பசும்பொன்னில் வைத்தே ஓபிஎஸ், செங்கோட்டையனை சந்தித்து சசிகலா ஆதரவு தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம்:
இந்தநிலையில் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழிசாமி உத்தரவிட்டார். அதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமித்திருந்தார். மேலும், கட்சி உறுப்பினர்கள் யாரும் செங்கோட்டையனுடன் எவ்வித தொடர்பும் வைக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சசிகலா வேதனை:
இந்நிலையில், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா மேலும் கூறியிருப்பதாவது, “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையனை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
செங்கோட்டையன் போன்றோர் எம்ஜிஆர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது” போன்றது. இது அஇஅதிமுக என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம்” என்றும் எச்சரித்துள்ளார்.