Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழக அரசு சொன்ன GOOD NEWS!!

Laptops for college students: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கி விட வேண்டுமென்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக விரைவில் லேப்டாப்களை உற்பத்தி செய்ய ஏதுவாக 3 நிறுவனங்களுக்கு ஆர்டர்களை பிரித்து வழங்கியுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழக அரசு சொன்ன GOOD NEWS!!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Oct 2025 14:07 PM IST

சென்னை, அக்டோபர் 31: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் (Laptop) வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த லேப்டாப்களை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக ஹெச்.பி,(HP) டெல்,(Dell) ஏசர் (Acer) ஆகிய 3 நிறுவனங்ககளுக்கு எல்காட் (ELCOT) நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. முன்னதாக, மாணவர்களுக்கு வழங்குவதற்கான லேப்டாப் மாடல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து முதல்வர் ஸ்டாலின் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read: பீகாரில் “மகளிருக்கு ரூ.2 லட்சம், இலவச கல்வி”: பாஜக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்!!

மாணவர்களுக்கு HP, Dell, Acer லேப்டாப்கள்:

தமிழக அரசு 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி, டேப் (TAB) அல்லது லேப்டாப் (LAPTOP) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. அதோடு, இந்த திட்டத்திற்காக மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அதன்படி, பல்வேறு நிறுவனங்களின் டெண்டர் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது ஹெச்.பி,(HP) டெல்,(Dell) ஏசர் (Acer) ஆகிய மூன்று நிறுனங்களுக்கு லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எதற்காக 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், அரசின் எந்த இலவச திட்டங்களையும் புதிதாக வழங்க முடியாது. ஏற்கெனவே, நடைமுறையில் அந்த திட்டம் இருப்பின் அதனை வழங்க எந்த தடையும் இருக்காது. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை வழங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு உள்ளது. அதன் காரணமாகவே, 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்திற்கு இந்த ஆணையை வழங்கினால், அவர்கள் லேப்டாக்களை உற்பத்தி செய்து விநியோக்க காலதாமதம் செய்யலாம் எனக் கருதிய அரசு, இந்த ஆர்டரை 3 நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது.

Also read: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!

மாணவர்களுக்கு எப்போது லேப்டாப் கிடைக்கும்:

இதில், முக்கியமாக எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக மேற்கூறிய 3 லேப்டாப் நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு லேப்டாப்களை கொள்முதல் செய்ய உள்ளது. இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு..ஸ்டாலின், இந்த லேப்டாப்களின் மாடல்களை பார்த்து இறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, லேப்டாப் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையில் விரைவில் இதற்கான உற்பத்தி பணிகளை தொடங்க உள்ளன. தொடர்ந்து, அடுத்த வாரத்தில் மாணவர்களுக்கு விரைவாக இந்த லேப்டாப்களை மார்ச் மாதத்திற்குள் எப்படி விநியோகித்து முடிப்பது, இத்திட்டத்தை எப்போது தொடங்குவது என்பது தொடர்பாக அடுத்த வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூடி இறுதி செய்ய உள்ளது.