Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகாரில் “மகளிருக்கு ரூ.2 லட்சம், இலவச கல்வி”: பாஜக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்!!

Bihar Election 2025: பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்கிற சட்டம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், என்டிஏ கூட்டணியோ, 1 கோடி பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

பீகாரில் “மகளிருக்கு ரூ.2 லட்சம், இலவச கல்வி”: பாஜக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்!!
பீகாரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக கூட்டணி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Oct 2025 14:03 PM IST

பீகார், அக்டோபர் 31: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், நிதிஷ்குமாரிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) – காங்கிரஸின் மகா பந்தன் கூட்டணி உள்ளது.

இதையும் படிங்க: National Unity Day : தேசிய ஒற்றுமை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

இந்தியா கூட்டணி தேர்தல் வாக்குறுதி:

அந்தவகையில், அக்டோபர் 28ஆம் தேதி எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘பீகாருக்கு தேஜஸ்வியின் உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து வெளியிட்டனர். அதில், ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்கிற சட்டம் கொண்டுவரப்படும், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும், 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட ஏராளாமான வாக்குறுதிகளை அளித்திருந்தது.

இந்நிலையில், பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்:

அதில், உயர்கல்வி பயிலும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் (Extremely Backward Class – EBC) மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி, ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள் வழங்கப்படும், தொழில் தொடங்கும் 75 லட்சம் மகளிருக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரீல்ஸ் மோகம்.. ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

மேலும், விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3,000 உதவித்தொகை, KG முதல் முதுகலைப் படிப்பு வரை தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்துடன் சத்துள்ள காலை உணவு வழங்கப்படும், தரமான மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும், இலவசமாக ரேஷன் பொருள்கள், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அவர்கள் அளித்துள்ளனர்.