அசாமில் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம்.. வடகிழக்கின் முதல் ELF-இல் பிரதமர் மோடி
ரூ.100 கோடி செலவில், மோரான் பைபாஸ் சாலையில் 4.2 கி.மீ. நீளத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதையாக இந்த ELF அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான்படை (IAF) போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு தந்திரோபாய மற்றும் பல்நோக்கு ஓடுதளமாக செயல்படும். இதன் மூலம் பாதுகாப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை திறன் வலுப்பெறும்.
பிப்ரவரி 14, 2026: வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர தரையிறங்கும் வசதி (ELF) மையத்தில், அசாம் மாநிலத்தின் மோரான் பகுதியில் C-130J விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கம் செய்தார். விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள அசாம் மாநிலத்திற்கான தனது ஒருநாள் பயணத்தை இதன் மூலம் அவர் தொடங்கினார். அசாமில் வருகை தந்த பிறகு சாபுவா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், மோரானில் அமைக்கப்பட்டுள்ள ELF மையத்தில் தரையிறங்கினார். இதற்கு முன் ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், சவாலான சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்த இந்த ELF மையம் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
பல்நோக்கு ஓடுதளம் – என்ன பயன்?
ரூ.100 கோடி செலவில், மோரான் பைபாஸ் சாலையில் 4.2 கி.மீ. நீளத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதையாக இந்த ELF அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான்படை (IAF) போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு தந்திரோபாய மற்றும் பல்நோக்கு ஓடுதளமாக செயல்படும். இதன் மூலம் பாதுகாப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை திறன் வலுப்பெறும்.
மேலும் படிக்க: இனி இந்த சாலைகளில் சுங்க கட்டணம் குறைவு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!
இந்த வசதி சிவில் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலையில் திப்ருகர் விமான நிலையத்திற்கு மாற்று ஓடுதளமாக இது செயல்படும். 40 டன் வரை எடையுள்ள போர் விமானங்களையும், 74 டன் அதிகபட்ச புறப்பாட்டு எடையுள்ள போக்குவரத்து விமானங்களையும் இந்த ELF கையாளும் திறன் கொண்டது. இந்தியாவின் முதல் ELF மையம் 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த பிரதமர் மோடி:
தரையிறங்கிய பின்னர், தேஜஸ், சுகோய், ரஃபேல் உள்ளிட்ட பல போர் விமானங்கள் கலந்து கொண்ட 40 நிமிட வான்விழாவை பிரதமர் பார்வையிட்டார். தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். குவாஹாத்தியை வட குவாஹாத்தியுடன் இணைக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட பாலத்தை அவர் திறந்து வைக்கிறார். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயண நேரம் சுருங்கி, ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் இடையேயான இணைப்பு மேம்படும்.
மேலும் படிக்க: உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!
குவஹாத்திக்கு 100 மின்சார பேருந்துகள்:
மேலும், போங்கோராவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மேலாண்மை கழகம் (IIM) குவாஹாத்தியின் தற்காலிக வளாகத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். நகரில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், கார்பன் உமிழ்வை குறைத்து காற்றுத் தரத்தை மேம்படுத்தவும் குவாஹாத்திக்காக கூடுதலாக 100 மின்சார பேருந்துகளை பிரதமர் கொடியசைத்து இயக்கவிடுகிறார். அதோடு, குவாஹாத்தியில் பாஜக கட்சி பணியாளர்களையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாற்ற உள்ளார்.