ரீல்ஸ் மோகம்.. ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
2 Boys Died While Shooting Reels | இளைஞர்கள் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இரண்டு சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் செய்தபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜல்காவ், அக்டோபர் 28 : மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பத்ராட் தாலுகாவை சேர்ந்தவர் ஹர்ஷல் நன்னாவரே என்ற 17 வயது சிறுவன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் கைர்நார் என்ற 17 வயது நண்பர் ஒருவர் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் அக்டோபர் 26, 2025 அன்று காலை 10 மணி அளவில் அவர்களது வீட்டிற்கு அருகே உள்ள பார்தி ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தின் மீது நின்று ரீல்ஸ் செய்துக்கொண்டு இருந்துள்ளனர்.
ரீல்ஸ் மோகம் – ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்
அடிக்கடி ரயில் வந்து செல்லும் தண்டவாளத்தில் அந்த சிறுவர்கள் எந்த வித கவலையும் இன்றி ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ஆமதாபாத், அவுரா விரைவு ரயில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது. ரயில் பார்த்தி ரயில் நிலைய பகுதிக்கு அருகே வந்ததும் சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டு இருப்பதை கண்ட ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். ஆனால், அந்த சிறுவர்கள் இருவரும் தங்களது காதில் ஹெட்போன் அணிந்திருந்த நிலையில், அவர்களுக்கு காது கேட்காமல் இருந்துள்ளது.
இதையும் படிங்க : சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை!




காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் பரிதாபமாக பலியான உயிர்கள்
ரயில் தங்களை நெருங்கி வருவதையும், ரயில் ஓட்டுநர் ஹாரன் அடிப்பதையும் உணராமல் சிறுவர்கள் தண்டவாளத்தின் மீது நின்றுக்கொண்டு இருந்த நிலையில், அந்த ரயில் சிறுவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர். அதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : Earthquake : மும்பையை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!
ஆனால் அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் கோயிலுக்கு சென்ற 9 வயது சிறுவன் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்தபோது ரயில் மோதி பலியான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இரண்டு சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தால் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.