கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அதனை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.

தமிழ்நாடு, அக்டோபர் 16: கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 16) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி, திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 15) முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி நேரம் என்பதால் வியாபாரிகளும், பட்டாசு விற்பனையாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
கனமழைக்கு எச்சரிக்கை
அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடம் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளை (அக்டோபர் 17) ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை, மயிலாடுதுறை, நீலகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழை..
இப்படியான நிலையில் இன்று (அக்டோபர் 16) தென்னிந்திய பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சியால் அக்டோபர் 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயிலுக்குள் மழைநீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 15) இரவு பெய்த கனமழையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலினுள் மழைநீர் புகுந்தது. இதனை அகற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை நகரமான திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.