Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!

Northeast Monsoon 2025: தமிழகத்தில் 2025 அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Sep 2025 11:12 AM IST

தமிழ்நாடு, செப்டம்பர் 24: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2025 அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பொதுவாக தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை கை கொடுக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை சீசன் நல்ல மழைப்பொழிவை கொடுத்தது. இப்படியான நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எவ்வளவு மழை பெய்தாலும் மக்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழையின் போது எதிர்பாராத வகையில் மழையின் அளவு இருந்ததால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. எனவே எதிர்பாராத மழை சூழலையும் சமாளிக்கும் பொருட்டு இந்த முறை திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான முக்கிய அறிவிப்புகள்

அதன்படி தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் கீழ் இயங்கும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியவை வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மழையால் மக்களுக்கு இந்த முறை பாதிப்பு ஏற்பட்டால் அது கண்டிப்பாக சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் தேங்காமல் வழிந்தோட செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் ஏசி வெப்பநிலை எவ்வளவு வைக்க வேண்டும்..? மின்சார கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்!

பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்கவும், அனைத்து சாலை பணிகளையும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் சாயும் நிலையில் இருக்கும் மரங்களை கண்டறிந்து அதனை அகற்ற வேண்டும். மழைக்கு இடிந்து விடும் நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை கண்டறிந்து அவர் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய சாலைகள், ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள் ஆகியவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டு மழைக்காலத்தில் குடிநீர் விநியோகம் தடைபடாத வகையில்  தொட்டிகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வார்டு வாரியாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி அதனால் வரும் நோய்களை தவிர்க்க வேண்டும். நகர்புறத்தில் இருக்கும் சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மின்சாரத்துறை பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.