AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வரும் கோடை விடுமுறை.. பள்ளிகள் திறப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்களான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் கோடை விடுமுறை.. பள்ளிகள் திறப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 May 2026 13:46 PM IST

மே 20, 2026: தமிழகத்தில் வருகிற ஜூன் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் தெரிவித்திருந்தார். அதன்படி, 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக கல்வித்துறை பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்:

அதன்படி, 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்களான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான இணைய வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?

பள்ளியறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்:

பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் கை கழுவும் இடங்கள் அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களில் தேவையற்ற மற்றும் பயன்பாடற்ற பொருட்கள் இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும். குடிநீர் தொட்டிகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் போதுமான தண்ணீர் வசதியுடன் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். மேலும், கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் திறந்த நிலையில் இல்லாமல் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:

அதேபோல், 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த வகுப்புகளில் சேர்க்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு ரிசல்ட்.. எந்த மாவட்டம் டாப்.. எது கடைசி.. முழு விவரம்!

பள்ளி வளாகங்களில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த அனைத்து அறிவுறுத்தல்களையும் தலைமையாசிரியர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow Us