நெருங்கும் தேர்தல்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கும் சசிகலா.. திட்டம் என்ன?
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிய “தர்மயுத்தம்” அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அந்த காலகட்டத்தில் அதிமுகவின் தலைமை மாற்றமடைந்து, எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழுப் பொறுப்பையும் ஏற்றார்
ராமநாதபுரம், பிப்ரவரி 24, 2026: தேர்தல் நெருங்கும் சூழலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சுமார் 30 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இணைந்து செயல்பட்ட சசிகலா, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நேரடி அரசியலில் முக்கிய பங்காற்றத் தொடங்கினார்.
சசிகலாவின் அரசியல் பயணம்:
டிசம்பர் 5, 2016 அன்று ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. பாதுகாப்பு படையின் 50 கம்பெனிகள் மார்ச் 10 ஆம் தேதி தமிழகம் வருகை..
ஆனால், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிய “தர்மயுத்தம்” அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அந்த காலகட்டத்தில் அதிமுகவின் தலைமை மாற்றமடைந்து, எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழுப் பொறுப்பையும் ஏற்றார்.
சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபின், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சசிகலா பலமுறை வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெளிவாக தெரிவித்தார். இதனால் சசிகலா தனித்த அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!!
புதிய கட்சியை தொடங்கும் சசிகலா – ஆதரவு யாருக்கு?
கடந்த சில மாதங்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் சசிகலா, அண்ணா நினைவு நாளிலும் தேர்தல் களத்தில் இறங்குவேன் என அறிவித்திருந்தார். தற்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி தொடக்கம், கூட்டணி நிலைப்பாடு, அல்லது தனித்துப் போட்டியிடும் முடிவு போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரனைப் போல “அம்மா அதிமுக” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் ஓ. பன்னீர்செல்வம் இணைவாரா? அல்லது தனித்த அரசியல் அமைப்பு உருவாகுமா? என்பது குறித்த அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் சமன்பாட்டில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.