“தெருக்கள், நீர்நிலைகளில் சாதிப் பெயர்கள் கூடாது!”.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு!!
Remove Caste Names From Streets and Water Bodies: தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் மற்றும் கிராமப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றி மறுபெயரிட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில எஸ்சி/எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் இமயம் இந்த உத்தரவைப் பிறப்பித்து அறிக்கை கேட்குள்ளார்.
சென்னை, செப்.29: தமிழ்நாட்டில் சாதிய அடையாளங்களை ஒழிக்கும் நோக்கிலும், சமூகச் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலும் அரசு மற்றும் நீதித்துறை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் கிராமப் பெயர்களில் நிலவும் சாதிப் பெயர்களை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும் என மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் (SC/ST) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: “தம்பி ஆதவ் அர்ஜூனா” விரைவில் பதவி விலக வேண்டி வரும்.. மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!
அரசாணையும் நீதிமன்றப் போராட்டமும்:
தமிழ்நாட்டில் உள்ள பொது இடங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளங்களை அகற்றுவது தொடர்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு தமிழக அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. இருப்பினும், இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டதால், அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கினை விரிவாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழக அரசின் அரசாணை முற்றிலும் செல்லுபடியாகும் என அண்மையில் இறுதித் தீர்ப்பு வழங்கியது.
மாநில SC/ST ஆணையத்தின் உத்தரவு:
உயர்நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் இந்த விவகாரத்தைச் சுயமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் இமயம் தலைமையில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அரசின் அரசாணை மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் கிராமப் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிப் பெயர்களை அகற்றிவிட்டு மறுபெயரிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முறைப்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து கட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
அறிக்கை தாக்கல் செய்ய கெடு:
பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி புதிய பெயர்கள் சூட்டப்பட்ட விவரங்கள் குறித்தும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் இமயம் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, தமிழ்நாட்டில் சாதியற்ற சமூகத்தை உருவாக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.