ரேசன் கடை விடுமுறையில் மாற்றம்..பொங்கல் பரிசுக்காக புது உத்தரவு.. முழு விவரம் இதோ!
Ration Shop Open On January 9: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வரும் ஜனவரி 9- ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை தடையின்றி பெற்றுக் கொள்ளலாம் .

பொங்கல் பரிசு தொகுப்பை இந்த நாளில் பெற்றுக் கொள்ளலாம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ. 248.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 8- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருள்களும், பொதுமக்கள் பெரிதாக எதிர்பார்த்த ரூ.3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளது. இதற்கான, டோக்கன்கள் அச்சிடப்பட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கு ஏதுவாக வருகிற ஜனவரி 9-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) ரேஷன் கடை செயல்பட வேண்டும் என்று உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் தொகுப்பு வழங்க ரேஷன் கடை திறப்பு
அதன்படி, அன்றைய தினம் ரேஷன் கடை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்து பொங்கல் பரிசு தொகுப்புகளையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மேல்முறையீட்டு மனு வழக்கில் இன்று தீர்ப்பு!
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல்
இதனால், வாரத்தில் வெள்ளிக்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நியாய விலை கடை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, விவசாயிகளிடமிருந்து அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட்டு அதனை மாநிலம் முழுவதும் இருக்கும் நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
ஜனவரி 8 முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
அங்கு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை தனித்தனி பைகளில் பிரித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனிடையே, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதளவில் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகையை முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது, இந்த பரிசு தொகுப்பானது வரும் ஜனவரி 8- ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: மதுப் பிரியர்களுக்கு முக்கியச் செய்தி… காலி மதுபாட்டிலை திரும்ப அளித்தால் பணம்!