பெண் காவல் ஆய்வாளரிடம் ரூ.5.42 கோடி சொத்து… தோண்டி துருவிய லஞ்ச ஒழிப்பு துறை… FIR- இல் அதிர்ச்சி தகவல்கள்!
Inspector Rajalakshmi Case: சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீதான சொத்து குவிப்பு வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மொத்தம் ரூ.5.42 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்தது.
சென்னை, திருமங்கலம் பகுதியில் உள்ள வெல்கம் காலனியில் விபச்சார தடுப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்து இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக ஆய்வாளர் ராஜலட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருந்தது. இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில், கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக ராஜலட்சுமி பணியில் சேர்ந்த நிலையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பூரில் அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீசார்.. 6 பேர் சுற்றி வளைத்து கைது.. பயங்கரவாத சதிச்செயலா?
வருமானம் ரூ.1.45 கோடி- செலவு ரூ.2.25 கோடி
அப்போது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டு வரை தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இதனிடையே, காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தும், விசாரித்தும் வந்தனர். இதில், கடந்த 2017 முதல் 2025- ஆம் ஆண்டு வரை காவல் ஆய்வாளர் ராஜலட்சுமியின் வருமானம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதே நேரத்தில் அவரது செலவுகள் ரூ.2 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரமாக இருந்தது.




மொத்தம் ரூ.5.42 கோடி சொத்துக்கள் இருப்பு
இது மட்டும் இன்றி கடந்த 2017- ஆம் ஆண்டில் ராஜலட்சுமி சொத்து மதிப்பு ரூ.3.64 லட்சமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.4.62 கோடியாக உயர்ந்தது. இதை தவிர்த்து, சேமிப்பாக சுமார் ரூ.80 லட்சம் வைத்திருந்ததும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவுக்கு தெரியவந்தது. மொத்தத்தில் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்வதில், ரூ.5.42 கொடி சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு பிரிவின் கணக்கீட்டின்படி, ராஜலஷ்மி தனது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட சுமார் 372 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரியவந்தது.
மேலும் படிக்க: சென்னையில் பெண்ணுக்கு வந்த பார்சலில் பகீர் கிளப்பும் பொருள்.. கடும் அதிர்ச்சி.. அப்படி உள்ளே என்ன இருந்தது!