சென்னையில் பெண்ணுக்கு வந்த பார்சலில் பகீர் கிளப்பும் பொருள்.. கடும் அதிர்ச்சி.. அப்படி உள்ளே என்ன இருந்தது!
Chennai Crime: சென்னையில் கடையில் வேலை பார்த்து வரும் பெண் ஊழியருக்கு வந்த பார்சலில் பகீர் கிளப்பும் பொருள் இருந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் ஜித்தேந்தர் ஜெயின் என்பவர் வாகன உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், ஜித்தேந்தர் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்தார். அப்போது, அந்த நபர் தான் கையில் கொண்டு வந்த பார்சலை ஸ்ருதியிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், ஸ்ருதி வருவதற்குள் அந்த நபர் கடையின் வாசலில் பார்சலை வைத்துவிட்டு அவர் வந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார். இதை தொடர்ந்து, ஸ்ருதியும், கடை ஊழியர்களும் சேர்ந்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், விபூதி ஆகியவை இருந்தன. இதனைப் பார்த்து ஸ்ருதியும், கடை ஊழியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அதன்பேரில், எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அந்த பார்சலை கைப்பற்றிய காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், இது தொடர்பாக ஸ்ருதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: இந்த 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு




ஊழியர்கள் இடையே முன்விரோதம் காரணமாக
இதில், தினேஷ்குமார் அதே கடையில் வேலை பார்த்து வருவதும், இவருடன் வேலை பார்க்கும் ஸ்ருதியின் தம்பியான சிங்கார வேலனுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், தினேஷ்குமாருக்கு அதிக வேலை கொடுப்பது, அவரை திட்டுவது, அதிக வேலை வாங்குவது, வெளியே போகச் சொல்வது என கடை ஊழியர்கள் சிங்கார வேலனுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஸ்ருதி மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேலன் மற்றும் குடும்பத்தினரை பயமுறுத்துவதற்காக மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், விபூதி ஆகியவற்றை பார்சலாக ஸ்ருதியிடம் அளித்தது தெரிய வந்தது.
3 பேரை கைது செய்த போலீசார்
இதைத் தொடர்ந்து, தினேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஜோசப் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊழியர்கள் வேலை பார்த்து வரும் கடையில் மனித மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் ஆகியவற்றை பார்சலாக அந்த கடையில் வேலை பார்த்த ஊழியரே கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: Weather Alert: இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது.. வானிலை நிலவரம் இதோ..