தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்.. டிரோன்கள் பறக்க தடை
PM Modi Tamil Nadu Visit : இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். 2025 ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். 2025 ஜூலை 27ஆம் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 24 : இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி 2025 ஜூலை 26ஆம் தேதி தமிழகம் (PM Modi Tamil Nadu Visit) வர உள்ளார். மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 2025 ஜூலை 26ஆம் தேதி மாலை தூத்துக்குடி வர உள்ளார். அதன்பிறகு, 2025 ஜூலை 27ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார். இதனையொட்டி, இரு மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக, தமிழகத்திற்கு வருகை தருகிறார். 2025 ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அப்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரம்மாண்ட வகையில், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டரா பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்
மேலும், அப்பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு, தூத்துக்குடியில் இருந்து அன்றைய தினம் இரவு திருச்சிக்கு செல்கிறார். அங்கு இரவில் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் பிரதமர் மோடி, 2025 ஜூலை 27ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.




அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி நகர காவல்துறை விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், அப்பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.