Monsoon Session 2025: உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்..!
PM Modi's Address on Economy: 2025ம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி, பருவமழையின் பொருளாதார முக்கியத்துவம், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி, நக்சலைட் ஒழிப்பு முயற்சிகள், மற்றும் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். விவசாயம், கிராமப்புற பொருளாதாரம், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லி, ஜூலை 21: 2025ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் (Monsoon Session) இன்று அதாவது 2025 ஜூலை 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) கூறுகையில், “ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிகவும் முக்கியமானது. வரும் நாட்களில் நாடு இதனால் பயனடையும். இந்த மழைக்கால கூட்டத்தொடர் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் கூட்டத்தொடராகும். பருவமழை புதுமை மற்றும் மறு கண்டுபிடிப்பின் சின்னம். இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் பருவ மழையிம்போது நாடு மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. விவசாயத்திற்கு நன்மை பயக்கும் பருவம் பற்றிய தகவல்கள் உள்ளன.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திலும் மழை முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளை விட இந்த முறை 3 மடங்கு அதிக நீரை நம்மால் சேமிக்க முடியும். இது வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் பெரிதும் பயனளிக்கும்” என்று தெரிவித்தார்.




ஆபரேஷன் சிந்தூர்:
May the Monsoon Session of Parliament be productive and filled with enriching discussions that strengthen our democracy. https://t.co/Sj33JPUyHr
— Narendra Modi (@narendramodi) July 21, 2025
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தின் சக்தியை உலகம் கண்டது. ஆபரேஷன் சிந்தூரின்போது, 22 நிமிடங்களுக்குள், பயங்கரவாதிகளின் தலைவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய வடிவ இராணுவ சக்தியால் உலகம் நம்மை உற்று பார்த்தது. இந்தியாவால் தயாரிக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான உலகத்தின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது” என்றார்.
நக்சலைட்:
நக்சலைட் குறித்து பேசிய பிரதமர் மோடி, “ நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய நம்பிக்கையுடனும், உறுதியுடனும் நமது பாதுகாப்பு படைகள் இன்று முன்னேறி வருகிறது. இன்று பல மாவட்டங்கள் நக்சலைட்டில் இருந்து விடுபட்டுள்ளன. இந்தியாவில் மாவோயிசம் மற்றும் நக்சலைட் ஆதிக்கம் சுருங்கி வருகிறது. நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் துப்பாக்கியின் முன் வெற்றி பெறுகிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் முன்பு சிவப்பு மண்டலங்களாக இருந்த மண்டலங்கள் இப்போது நாட்டிற்கு பச்சை மண்டலங்களாக மாறி வருகின்றன. மேலும், இந்த அமர்வில் முழு நாடும் நாட்டின் பெருமைக்குரிய இந்த பாடலை கேட்கும். மேலும், ஒவ்வொரு எம்.பி.யிடமிருந்தும் அதை கேட்கும். ” என்றார்.
உலகின் 3வது பெரிய பொருளாதாரம்:
இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “ 2014ம் ஆண்டில் நீங்கள் அனைவரும் பொருளாதார துறையில் எங்களுக்கு பொறுப்பை வழங்கியபோது, நாடு பலவீனமான 5 கட்டத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. 2014க்கு முன்பு, உலக பொருளாதாரத்தில் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்தோம். இன்று இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது” என்றார்.