TN Assembly: ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” – பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி
Udhayanidhi Speech: மேலும், “கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது மட்டுமின்றி பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. முதலமைச்சர் கோப்புகள் தொடர்பாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கோப்புகளை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஜோசியர் சொன்னால்தான் அவற்றை வெளியிடுவீர்களா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஆகஸ்ட் 21, 2026: “நாங்கள் ஒரு கேள்வி கேட்டால், நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ஆளுங்கட்சியினர் பதிலளிக்கின்றனர். சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா அல்லது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று தெரியவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிப் பேசினார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கிறதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி:
அப்போது பேசிய அவர், “இந்த அவையை நீங்கள் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். ஆனால், எங்களை விட ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறீர்கள். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரமின்றி பேசும் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர்கள் பேசியவற்றில் அதிகமான பகுதிகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள்” என்றார்.
மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் டெல்லி விரைவு.. பாஜகவில் முக்கிய மாற்றங்கள்?
மேலும், “கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது மட்டுமின்றி பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. முதலமைச்சர் கோப்புகள் தொடர்பாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கோப்புகளை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஜோசியர் சொன்னால்தான் அவற்றை வெளியிடுவீர்களா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். நாங்கள் கேள்வி கேட்டால், நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். கேள்வி நேரத்தை முதன்முதலில் நேரலையில் ஒளிபரப்பியது நாங்கள்தான். தற்போது கேள்வி நேரத்தை நிறுத்த முடியாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.
கோப்புகள் சீக்கிரம் திறந்து பார்த்து நடவடிக்கை வேண்டும்:
அப்போது ஆளுங்கட்சி தரப்பில் ஜோசியம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “ஜோசியம் என்பது தவறான வார்த்தை இல்லை. ஜோசியருக்கு அரசு பதவி கொடுத்து, பின்னர் நீக்கியவர்கள் நீங்கள்தான். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்தது ஏற்கனவே தமிழகத்துக்குத் தெரியும்” எனக் கூறினார்.
மேலும், “Open Challenge ஆகச் சொல்கிறேன். சினிமா பஞ்ச் டயலாக்குகளை பேரவையில் பேசக்கூடாது. அந்தக் கோப்புகளை சீக்கிரம் திறந்து பாருங்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது. நாங்கள் அஞ்சமாட்டோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி சடலமாக மீட்பு.. மாணவர்கள் கொந்தளிப்பு.. போலீசார் குவிப்பு!!
இதையடுத்து, சட்டப்பேரவையில் நீக்கப்படும் கருத்துகள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார். “நேரலை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை; அதை வரவேற்கிறோம். ஆனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிடப்படுகின்றன. அவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?” எனக் கேட்டார்.
ஆதாரமின்றி பேசக்கூடாது – உதயநிதி ஸ்டாலின்:
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “ஆதாரமின்றி கூறப்படும் கருத்துகள் உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன. நீக்கப்பட்ட காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்பாக உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும். அவையின் மாண்பைக் குறைக்கும் வகையிலான எந்தப் பேச்சாக இருந்தாலும் அது நீக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆதாரம் இருந்தால் மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். அவைக்கு உதவாத, மக்களுக்குப் பயனளிக்காத கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன. எனவே, உறுப்பினர்கள் கண்ணியமாகப் பேச வேண்டும்” எனக் கூறினார்.