நல்லக்கண்ணு உடல்நிலையில் திடீர் பின்னடைவு.. மருத்துவமனை விரைந்த தலைவர்கள்..
Nallakkannu health deteriorates: கடந்த 1ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை, பிப்ரவரி 24: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தககவல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
மேலும் படிக்க: அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..
பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
நுரையீரல் தொற்று பாதிப்பு:
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனையின் டீன் சாந்தாராமன் கூறினார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல்நிலையில் பின்னடைவு:
இந்நிலையில், கடந்த 1ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நிலையில் நேற்று திடீரென பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்களில் தகவல் பரவியது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை:
மேலும், அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தி அவருடைய கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்களிடையிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெகவிற்கு ஆதரவளிக்கும் பன்ருட்டி ராமசந்திரனின் எம்.ஜி.ஆர் அதிமுக.. பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார் அறிவிப்பு..
மருத்துவமனைக்கு விரைந்த தலைவர்கள்:
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் மருத்துவமனை விரைந்தார். அங்கு நல்லக்கண்ணு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.