ஆர்டிஓ செல்லானில் இப்படியொரு மோசடியா? லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விவசாயி..தஞ்சாவூரில் சம்பவம்!
Thanjavur Cyber Crime: தஞ்சாவூரில் விவசாயியிடம் ஆர்டிஓ செல்லான் மூலம் இணைய வழியில் ரூ.12.50 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் விவசாயியிடம் ரூ.12.50 லட்சம் மோசடி
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் (50 வயது). விவசாயியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாததற்காக அவருக்கு போலீசார் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்துல் அந்த அபராத தொகையை செலுத்த தவறிவிட்டாராம். இந்த நிலையில், அப்துலின் செல்போனுக்கு போக்குவரத்து துறையில் இருந்து ரூ.1,188 அபராதம் செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. ஆனால், 2- ஆவது முறையும் அப்துல் அந்த அபராத தொகையை செலுத்த தவறி விட்டாராம். இந்த நிலையில், அவரது செல் போன் வாட்ஸ் ஆப்பில் உள்ள ஒரு குழுவில் ஆர். டி. ஓ. செல்லான் போக்குவரத்து அபராத மொபைல் செயலியை பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த செயலியை அவர் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அபராத தொகையை செலுத்துவதற்கு முயன்று உள்ளார்.
செயிலியில் வங்கி விவரங்கள் உள்ளீடு
அப்போது, அந்த செல்போன் செயலியில் அப்துலின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அவரும் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கள்கிழமை) அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்த அப்துல் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, மர்ம நபர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதை அப்துல் உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அப்துல் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றார்.
மேலும் படிக்க: வார இறுதி நாள்கள்..சொந்த ஊருக்கு செல்ல 725 சிறப்பு பேருந்துகள்..டிஎன்எஸ்டிசி அறிவிப்பு!
விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.12.50 லட்சம் மாயம்
ஆனால், அவர் காவல் நிலையம் செல்வதற்குள் அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு முறையில் ரூ.12.50 லட்சத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். உடனே, அப்துல் இது தொடர்பாக வங்கிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வங்கி ஊழியர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர், இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் இணையவழி குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் அப்துல் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள்
தமிழகத்தில் அண்மை காலமாக இணைய வழி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை பணத்தை இழந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமில்லாத செல்போன் செயல்களை செல்போனில் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கைகளை வங்கி நிர்வாகம் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டு வருகின்றனர். இருந்தாலும், இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: சட்டவிரோத ஊடுருவல்…வங்கதேசத்தினர் 24 பேர் கைது…மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை!