சென்னையில் நள்ளிரவில் மர்ம கும்பல் வெறிச்செயல்.. சாலையில் சென்ற 10 பேருக்கு அரிவாள் வெட்டு!
சென்னையில் நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று சாலையில் சென்றவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்ததற்காக ஒருவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை, நவம்பர் 01: சென்னையில் போதை கும்பல் ஒன்று, சாலையில் சென்றவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த இந்த கும்பல் பொது இடத்தில் கண்ணில் காண்பவர்கள் அனைவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோயம்பேடு, கொளத்தூர் பகுதிகளில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம கும்பலின் வெறிச்செயலால் காயமடைந்துள்ளனர். தலைநகர் சென்னையில் முக்கிய சாலைகளில் மர்ம கும்பல் இதுபோன்ற அட்டூழியத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. அதோடு, பொது மக்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்வியாகி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..
மர்ம கும்பல் வெறிச்செயல்:
சென்னை கொளத்தூர் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாலையில் சென்ற ஒருவரை ஓடஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளது. தொடர்ந்து, அங்கிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற கும்பல் 12 மணியளவில், இதேபோன்று வழியில் சென்ற நபர்களை ஓடஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது. அதோடு, வீடு புகுந்து ஒரு பெண் உட்பட 2 பேர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து, பொது இடத்தில் போதையில் இவ்வாறு கொலை வெறியுடன் சுற்றிவந்த அந்த கும்பலை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக சாலையில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.




உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்:
எனினும், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளது. இதனிடையே, மர்ம கும்பல் வெட்டியதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கார்த்திக் என்ற நபரும், ஆட்டோ ஓட்டுநர் கணேசன் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார். கொளத்தூர் பகுதி சாலைகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..
அதில், ஒரு இடத்தில் அந்த மர்ம கும்பல், ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் அக்கும்பல் சிறையில் இருந்து நேற்றைய தினமே வெளிவந்தது தெரியவந்துள்ளது. அதோடு, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது மாத்தி என்கிற ரவுடி தலைமையிலான போதை கும்பல் என்பதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த ரவுடி விக்கியும் இதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வரும் கோயம்பேடு போலீசார் தலைமறைவாக உள்ள அக்கும்பலை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.