காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெகவிற்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் - மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 08 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என கூறி ஆளுநர் அந்த கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி. புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க : DMK MP Kanimozhi: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!
தவெகவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 8, 2026
முன்னதாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கவிருப்பதாகவும் இதற்காக 2 கட்சி எம்எல்ஏகளும் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப இரண்டு கட்சி தலைவர்களும் தங்கள் எம்எல்ஏகள் கூட்டத்தை நடத்தினர். இதனால் தமிழக அரசியலில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத புதிய மாற்றமாக திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதனை மறுக்கும் விதமாக தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை அமைந்துள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆளுநரை அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
மற்றொரு பக்கம் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. இது தொடர்பாக இரண்டு கட்சி தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு என்றும் தெரிவித்துள்ளன.