Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mallai Sathya: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ அறிவிப்பால் பரபரப்பு

Mallai Sathya vs Durai Vaiko: கடந்த சில மாதங்களாக கட்சியின் தலைமைக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் கட்சியை விட்டே நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீதி கேட்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தார்.

Mallai Sathya: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ அறிவிப்பால் பரபரப்பு
மல்லை சத்யா - வைகோ - துரை வைகோ
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Sep 2025 10:47 AM IST

சென்னை, செப்டம்பர் 6: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் வைகோ உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் மல்லி சத்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதிமுகவில் துரை வைகோ – மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு கடந்த சில மாதங்களாக நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மல்லை சத்யா – துரை வைகோ மோதல்

மறுமலர்ச்சி திராவிட கழகம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியின் தளபதிகளில் ஒருவராக திகழ்பவர் மல்லை சத்யா. கட்சியிலிருந்து வெளியேறி ஏராளமானோர் பிற கட்சிகளில் இணைந்த நிலையில் மல்லை சத்யா மட்டும் வைகோவின் வலது கரமாக இருந்து செயல்பட்டு வந்தார். அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் வைகோவுக்கு அடுத்து அவர்தான் என்ற நிலை இருந்தது.

Also Read: MDMK: முற்றும் மோதல்.. மல்லை சத்யாவுக்கு வைகோ நோட்டீஸ்..!

இதனிடையே தொடர்ச்சியாக வாரிசு அரசியலை எதிர்த்து வந்த வைகோ கட்சிக்குள் தனது மகன் துரை வைகோவை அழைத்து  வந்தார். துரை வைகோ தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களவை எம்பியாக பதவி வகித்து வருகிறார். அதேசமயம் மதிமுகவில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவி வகிக்கிறார். இப்படியான நிலையில் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதனால் துரை வைகோ தனது பொறுப்பை ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றார். ஆனால் வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

மல்லை சத்யாவுக்கு எதிராக பேசிய வைகோ

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு எப்படி மாத்தையா துரோகம் செய்தாரோ அதேபோல் மல்லை சத்யா செய்து விட்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா தன்னை துரோகி  என அழைத்ததற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால் அதை குடித்து விட்டு இறந்து போயிருப்பேன் எனக் கூறியிருந்தார்.

Also Read: அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்டுள்ளது.. வேதனையில் துடிக்கிறேன் – மல்லை சத்யா

மேலும் மக்கள் மன்றத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக மதிமுகவிலிருந்து தற்காலிகமாக மல்லை சத்யா நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா தனது அரசியல் பயணத்தை முன்னெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது