அன்புமணியை அமைச்சராக்கியது தவறு: வேதனை வெளிப்படுத்திய ராமதாஸ்!!
PMK Intrenal issue: ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை அன்புமணி ஆதரவாளர்கள், வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல், அடிதடி தாக்குதல் வரை சென்றுள்ளது. இவ்விவகாரத்தில், இருதரப்பு மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், நவம்பர் 06: அரசியலில் சில தவறுகளை செய்துள்ளதாகவும், அதில் முதல் தவறு அன்புமணியை அமைச்சராக்கியது, என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இரண்டாவது தவறு அவருக்கு கட்சித் தலைவர் பொறுப்பு கொடுத்தது என்றும், அன்புமணியின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும் குமுறியுள்ளார். கடந்த சில காலமாக ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சியும் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதிமுகவுக்கு ஏற்பட்ட அதே நிலை, ராமதாஸ் இருக்கும்போதே அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது எது உண்மையான பாமக என்ற குழப்பம் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தலைவர்களுக்கே எழும் அளவுக்கு அவர்கள் பிரச்சினை உள்ளது.
அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால், அவர் பாமக கட்சித் தலைவர் என்றே பல்வேறு பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அன்புமணி ஆதரவாளர்கள் பதவியை பறித்ததாக ராமதாஸ் அறிவிக்கிறார். பதிலுக்கு அன்புமணியே அவர்களுக்கு வேறு சில முக்கிய பொறுப்புள்ள பதவிகளை அளித்து அறிவிப்பை வெளியிடுகிறார். இப்படி, தந்தை – மகன் இடையே நீடிக்கும் பிரச்சினையால் அக்கட்சி இரு அணிகளாக பிரிந்து உடைந்த நிலையில் உள்ளது.




அமைதியாக இருந்தது பாமக:
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமகவை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது. என்னோடு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 3 எம்எல்ஏக்கள் தற்போது அன்புமணி கும்பலோடு போய்விட்டனர். அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்தது. இப்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதற்கு நான்தான் காரணம் என்றும், பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளேதாகவும் கூறிய அவர், என்னை எதிர்ப்பவர்களுக்கும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம் என்றார்.
Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
கோமாளி தனம் செய்யும் அன்புமணி:
அதோடு, என்னுடன் இருந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளி தனம் செய்கிறார்கள். அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள். ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள். அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல் என்றும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.