அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!!
All party meet: தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தாண்டி பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.
சென்னை, நவம்பர் 06: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான விதிமுறைகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில்,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர்களிடம் தெரிவிக்க உள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழக வரலாற்றில் இல்லாத அளவு ஒரு அரசியல் தலைவர் கூட்டத்தில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது நாடேயே அதிர்ச்சியடைய செய்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதேபோல், விஜய் தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.




நெரிசலுக்கு யார் காரணம்:
இதனிடையே, குறுகலான இடத்தில் அதிகளவிலான மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடியதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்பட்டது. அதோடு, சம்பவ இடத்தில் இருந்து தவெகவினர் அனைவரும் தலைமறைவாகி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அரசு, காவல்துறையின் அலட்சியமே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று ஒரு தரப்பும், சரியான திட்டமிடல் இல்லாதது, தண்ணீர் வழங்காதது, பரப்புரைக்கு தாமதமாக வந்தது உள்ளிட்டவையே காரணம் என்று மற்றொரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன.
இன்று அனைத்துக் கட்சி கூட்டம்:
இந்நிலையில், வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 1ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க, அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மூத்த அமைச்சர்களின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சிகளை கடந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் எனக் கூறப்படுகிறது.