Maduranthakam ByElection Voting: விசில் சின்னத்துக்கு நேர கறுப்பு மை.. மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்..
Maduranthakam Bypoll: விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கருப்பு மை இருந்தது குறித்து வாக்காளர்கள், இதனால் குறிப்பிட்ட சின்னத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 6, 2026: தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
விசில் சின்னம் நேராக கறுப்பு மை:
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கருப்பு மை இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாற்று இயந்திரம் வந்தவுடன் மீண்டும் தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு:
இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், வேறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. விசில் சின்னத்துக்கு நேராக கருப்பு மை இருந்தது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மை எவ்வாறு வந்தது, யாரேனும் திட்டமிட்டு வைத்தார்களா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பின்னரே முழுமையான தகவல் தெரியவரும்.
மேலும் படிக்க: 2 தொகுதிகள் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவில் சுணக்கம்
இதனிடையே, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்ததால் சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – களத்தில் 27 வேட்பாளர்கள்:
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: போராடிய செவிலியர்களை மின்சாரத்தைத் துண்டித்து கைது செய்வதா?.. “ரீல்ஸ் முதல்வர் பதில் சொல்வாரா?”.. கொந்தளித்த இபிஎஸ்!!
விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கருப்பு மை இருந்தது குறித்து வாக்காளர்கள், இதனால் குறிப்பிட்ட சின்னத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.