சார் பதிவாளர் நில ஆவண முறைகேடு வழக்கு.. திருவாரூரில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிசிஐடி நடவடிக்கை!
Tiruvarur Sub Registrar Office Document Fraud : திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நில ஆவணத்தை முறைகேடு செய்த வழக்கில் த லைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
திருவாரூர் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு நில ஆவணங்களை திருத்தி சொத்துக்களை அபகரிக்க முயன்ற முக்கிய குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவாரூர் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஆவணங்களை சசிகுமார் என்பவர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மற்றும் சில தனிநபர்களுடன் சேர்ந்து ஆவணங்களை அழித்தும், அதில் சில மாற்றங்களை செய்தும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2026 ஆகஸ்ட் 21- ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோயில் நிலங்கள், மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மோசடி
இந்த வழக்கின் விசாரணையில் சசிகுமார் மற்றும் திருவாரூர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், சில தனி நபர்கள் ஆகியோருடன் இணைந்து கூட்டு சதி செய்து திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த அரசு ஆவணங்களை அழித்து, திருத்தம் செய்து விருதாச்சலம் குமார தேவர் மடம், திருவாரூர் தட்சிணாமூர்த்தி மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சில கோயில் நிலங்கள், அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் நிலங்கள் ஆகியவற்றின் சர்வே எண்கள் மூலம் மோசடி செய்துள்ளனர்.
மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!
சொத்துக்களுக்கு சட்ட விரோத பட்டா மாற்றம்
இதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள புத்தகம் எண் 1 மற்றும் புத்தகம் எண் 3 ஆகியவற்றில் முறைகேடாக திருத்தம் மேற்கொண்டு, மேற்கண்ட சொத்துக்களை மோசடியாக அபகரித்து விற்பனை செய்யும் நோக்கத்தில் செயல்பட்டது தெரிய வந்தது. மேலும், அரசு ஆவணங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த விவரங்களை அழித்துவிட்டு, அதற்கு பதிலாக போலியான விவரங்களை பதிவு செய்து குறிப்பிட்ட சர்வே எங்களுக்கு சட்ட விரோதமாக பட்டா பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மேற்கண்ட சொத்துகளை தொடர்ந்து விற்பனை செய்திருப்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சசிகுமார் என்பவர் கடந்த நவம்பர் 3- ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேலைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள பட்டுவாடாவா.. விராலிமலையில் ரூ.2 ஆயிரம் பரிசு பொருள்கள் விநியோகம்.. ரகுபதி குற்றச்சாட்டு!