அரசுப் பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. தலைமை ஆசிரியை அதிரடி இடமாற்றம்!!
Kanyakumari school girls taking alcohol: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசுப் பள்ளியில் மாணவிகள் சீருடையுடன் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பள்ளியில் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்கு போதை சாக்லேட் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 14: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் பள்ளிச் சீருடையில் வகுப்பறையின் முன்பாக நின்றுகொண்டு மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் புழக்கமும் மதுப்பழக்கமும் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பள்ளி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்க முயன்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: ‘கருப்பு’ பட பாணியில் சோக சம்பவம்.. திருடு போன நகையை மீட்க ஓராண்டாக போராடும் ஏழைப் பெண்!
சீருடையில் மது அருந்திய மாணவிகள்:
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரு மாணவிகள், பள்ளிச் சீருடையில் வகுப்பறையின் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டு மது அருந்தியுள்ளனர். இக்கடூரச் சம்பவத்தைச் சக பள்ளி மாணவர்களேத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஜூலை மாதமே நடைபெற்ற நிலையில், வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இப்புகாரின் மீது உடனடி விசாரணை நடத்தி மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம், விஷயத்தை வெளியாட்களுக்குத் தெரியாமல் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மூடிமறைக்க முயற்சித்த பள்ளி:
மாணவிகள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, தன் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் தவறு வந்துவிடக் கூடாது என்ற சுய பாதுகாப்பு நோக்கில் தலைமை ஆசிரியை செயற்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த இரு மாணவிகளையும் தனியாக அழைத்து விசாரித்த தலைமை ஆசிரியை, இந்த மது அருந்தும் சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் நடக்கவில்லை என்றும், மாறாக வீட்டில் வைத்துத் தான் நடந்தது என்றும் அவசர அவசரமாக மாணவிகளிடம் கடிதம் எழுதி வாங்கியுள்ளார். இதனால் அப்போதைக்கு இச்சம்பவம் குறித்து எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது.
தலைமை ஆசிரியை இடமாற்றம்:
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி படுவைரலானது. வீடியோவை கூர்ந்து கவனித்த போது, இச்சம்பவம் சந்தேகத்திற்கு இடமின்றி பள்ளி வகுப்பறைக்கு முன்பாகவே நடந்துள்ளது என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். சம்பவத்தை மறைக்க முயன்றதும், தவறான முறையில் கடிதம் எழுதி வாங்கி அலட்சியமாகச் செயல்பட்டதும் நிரூபணமானதைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை உடனடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
போதை சாக்லேட் விநியோகம்:
இதனிடையே, அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்குத் தடைசெய்யப்பட்ட போதை சாக்லேட்டுகளை விநியோகம் செய்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் மற்றும் புகார்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி வளாகத்திற்குள் மது மற்றும் போதைப் பொருட்களின் ஊடுருவலை முற்றிலுமாகக் தடுக்க கல்வித் துறையும் காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு போதைப்பொருட்களைக் சப்ளை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.