திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணை..
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியருக்கு இவ்வாறு மிரட்டல் வந்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினர், எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர், மிரட்டலின் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜூன் 4, 2026: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தனா கார்க் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:
இந்த சூழலில், அவரது அலுவலகத்திற்கும் இல்லத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மின்னஞ்சலில், ஆட்சியர் அலுவலகம் மற்றும் வீட்டில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிப்பு சம்பவம் நடைபெறக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த மின்னஞ்சலில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர் வந்தனா கார்க் இல்லத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
தீவிர சோதனை மேற்கொண்ட போலீஸ்:
மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. அலுவலக அறைகள், நுழைவு வாயில்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து ஆட்சியரின் இல்லத்திலும் பல மணி நேரம் தீவிர சோதனை நடைபெற்றது.
போலியான தகவல்:
ஆனால், இரண்டு இடங்களிலும் எந்தவிதமான வெடிகுண்டு பொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்சியர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் கூடுதல் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியருக்கு இவ்வாறு மிரட்டல் வந்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினர், எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர், மிரட்டலின் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், மின்னஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட ஐபி முகவரி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை கொண்டு சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.