கோவை: அட்வான்ஸ் தொகையை தராமல் வாடகைதாரரை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர்! துடைப்பத்தைக் காட்டி ஆபாசப் பேச்சு
கழிவுநீர் விவகாரத்தைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தக் குடும்பத்தினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதியே வீட்டை காலி செய்துள்ளனர். அட்வான்ஸ் தொகையைத் தருவதாகக் கூறி நாட்களைக் கடத்தி வந்த வைரம், ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமையான நேற்று தருவதாகக் கூறி சுபாவை வரவழைத்துள்ளார்.
கோவை, ஜுன் 29: தொழில் நகரமான கோவையில் வாடகைக்குக் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் சிலர் அதிகக் கட்டணம் வசூலிப்பதோடு, அட்வான்ஸ் தொகையைத் தராமல் மோசடி செய்யும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, கோவையின் சிவானந்தா காலனி பகுதியில் வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர், வாடகைதாரரைத் துடைப்பத்தால் தாக்க முயன்று, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ள சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – அதிக ரத்தப்போக்கு… பெண் பரிதாப மரணம்
கழிவுநீர் விவகாரத்தில் வந்த வினை:
கோவை, சிவானந்தா காலனி, சுபாத்தாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த வைரம் என்ற பெண்ணிற்கு அப்பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் கணவனை இழந்த சுபா, அவரது கல்லூரி படிக்கும் மகள், தாய் ராணி மற்றும் தம்பி ஞானசேகர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த வீட்டின் கழிவறைத் தொட்டி நிறைந்து துர்நாற்றம் வீசிய விவகாரத்தில், பலமுறை முறையிட்டும் கழிவுநீரை அப்புறப்படுத்திய பின் தேங்கிய நீரை வாடகைதாரர்களே சுத்தம் செய்ய வேண்டும் என வைரம் வற்புறுத்தியுள்ளார். இது குறித்துக் கேள்வி எழுப்பிய ஞானசேகரை, வைரம் கையில் இருந்த துடைப்பத்தைக் காட்டி அடிக்கப் பாய்ந்ததோடு, அநாகரிகமான ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த அராஜகத்தைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த ஞானசேகர், இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சாவியைப் பிடுங்கிக் கொண்டு அரங்கேறிய மோசடி:
கழிவுநீர் விவகாரத்தைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தக் குடும்பத்தினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதியே வீட்டை காலி செய்துள்ளனர். அட்வான்ஸ் தொகையைத் தருவதாகக் கூறி நாட்களைக் கடத்தி வந்த வைரம், ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமையான நேற்று தருவதாகக் கூறி சுபாவை வரவழைத்துள்ளார். சுபா நேரில் சென்று அட்வான்ஸ் தொகையைக் கேட்ட போது, வீட்டின் சாவியை நைசாக வாங்கி வைத்துக் கொண்டு வைரம் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்.
கணக்கு காட்டி ஏமாற்றிய வைரம்:
மொத்தம் வாங்கிய முன் தொகையான ₹60,000-ல், வைரம் பல்வேறு காரணங்களைக் கூறி தோராயமாக ₹45,000 வரை கழித்துக் கொண்டுள்ளார். அதன் விபரம் மொத்த முன் தொகை – ரூ.60,000, 2 மாத வாடகை பாக்கி – ரூ.21,000, ஜூன் மாத (15 நாட்கள்) வாடகை – ரூ5,250, வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் செலவு – ரூ.15,000, பராமரிப்பு செலவு – ரூ.2,500 என வைரம் கழித்துக் கொண்ட மொத்தத் தொகை ரூ.43,750 ஆகும். இவை தவிர்த்து அவர் தர ஒப்புக்கொண்ட மீதித் தொகை – ரூ.16,250 மட்டுமே.
தொடர்கதை ஆகும் அராஜகம்:
இதேபோன்று அந்தப் பெண்மணி வாடகைதாரர்களிடம் மின்சாரம் மற்றும் குடிநீருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதும், இதுவரை அங்கு குடியிருந்து காலி செய்த எவருக்குமே அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் அராஜகம் செய்து துரத்தியடித்துள்ளதும் அக்கம்-பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையும் படிக்க : வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. விடிவதற்குள் நடந்த மர்மம்.. கிணற்றில் மிதந்த சடலம்..
பிழைப்பு தேடி கோவைக்கு வரும் நடுத்தரக் குடும்பங்களை வாட்டி வதைக்கும் இந்த வீட்டு உரிமையாளர் வைரம் மீது ரத்தினபுரி போலீஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.