ராகுல் காந்தியை மட்டுமே ‘சகோதரர்’ என்று அழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்
CM stalin speech about congress: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் - திமுக இடையேயான உறவு குறித்து முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிப்பொங்க பேசியுள்ளார். சமீபமாக காங்கிரஸ் - திமுக தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சென்னை, அக்டோபர் 27: நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில் பயணித்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், சுயமரியாதை உணர்வுடன் நடைபெற்ற இந்தத் திருமணம் சமூக மாற்றத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். இதுபோன்ற சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னதாக சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது என்றும், திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது எனவும் பெருமிதம் கூறினார்.
Also read: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 37 குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் விஜய்!
தொடர்ந்து, கலைஞருடன் நெருங்கி பழகியவர் சிக்கர் என்றும், சட்டப்பேரவையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர் என்றும் நினைவுகூர்ந்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய அவர், திமுகவும், காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணத்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.




யாரையும் சகோதரர் என்று அழைத்தது இல்லை:
காங்கிரஸின் இளம் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் என்மேல் காட்டக் கூடிய அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை நான் சந்திக்கும் போது யாரையும் சகோதரர் என்று சொன்னது கிடையாது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மட்டும் அருமை சகோதரர் என்று நான் சொல்லுவேன். அவரை சகோதரர் என்று அழைப்பதற்கு காரணமே அவர் எப்போது என்னுடன் பேசினாலும், ‘My Dear Brother’ என்றே என்னை அழைப்பார். அவருக்கு நான் மூத்த அண்ணன் என்று உணர்ச்சிப்பொங்க கூறினார். அதோடு, திமுக-வும் – காங்கிரஸும் அரசியலமைப்பு மட்டுமின்றி கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இருக்கிறோம். இந்தியாவின் குரலாக இருக்கக் கூடிய புரிதலும் கொள்கை உறவு நிச்சியமாக நாட்டின் எதிர்காலத்தை காக்கும் என்பது உறுதி என்று கூறினார்.
முதல்வரின் பேச்சு யாருக்கானது?
திருமண விழாவில் திமுக – காங்கிரஸ் உறவு குறித்து முதல்வர் பேசியது யாருக்காக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், ராகுல் காந்தி – விஜய் இடையேயான நெருக்கமான உறவு காரணமாக தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்து வருகின்றன. அதோடு, திமுக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே, அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
Also read: தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அதோடு, தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக முன்வைத்து வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் – திமுக உறவை பலப்படுத்தும் விதமாகவே திருமண விழாவில் முதல்வர் பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தமிழக காங்கிரஸூக்கு பதிலளக்கும் வகையிலே இந்த பேச்சு அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.