கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 37 குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் விஜய்!
Karur stampede: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்த நிகழ்வுக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, நிகழ்ச்சியல் பங்கேற்றவர்களும் புகைப்படம் உட்பட நடந்த எதையும் வெளியே யாருக்கும் தகவல் தெரிவிக்கக்கூடாது என தவெக சார்பில் கண்டிஷன் போடப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 27: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு சென்னை மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கரூரில் இருந்து 7 ஆம்னி பேருந்துகள் மூலம் நேற்று இரவே சென்னை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்ட அவர்களை இன்று காலை 10 மணி முதல் விஜய் தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். இதில், 33 குடும்பத்தினர் ஆம்னி பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், மேலும் 4 குடும்பத்தினர் விமானம் மூலம் இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Also read: தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்




கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக கேட்டு பெறும் விஜய்:
அந்தவகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் போது அவர்களின் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக பெற்று வரும் விஜய், அவர்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்து வருகிறார். ஏற்கெனவே, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி தவெக சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வழங்கப்படவில்லை. இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்தை விஜய் நேரடியாக வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, உயிரிழந்தவர்கள் புகைப்படங்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. நட்சத்திர விடுதியில் ஒரே அரங்கில் அனைத்து குடும்பத்தினரும் அமர வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினராக தனித்தனியாக சென்று விஜய்யை சந்தித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவுடன் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. அதன்பின்னர் மீண்டும் ஆம்னி பேருந்துகள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also read: வட சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய அலர்ட்!
முன்னதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் கரூரில் அனைவரையும் சந்திப்பதற்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. துயர சம்பவம் நடந்த 30 நாட்களுக்குகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விட வேண்டுமென்று எண்ணிய விஜய், இறுதியில் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறி வருகிறார்.