திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி பெருவிழா: சூரசம்ஹாரத்தை காண குவியும் பக்தர்கள்
soorasamharam 2025: திருச்செந்தூரில் இன்று மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். தொடர்ந்து, கடற்கரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிகப்பட்டுள்ளது. இன்றிரவே பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு என திருச்செந்தூர் (Thiruchendur) சுப்பிரமணிய சுவாமி கோவில் போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து முருகனை வழிபடுவர். அந்தவகையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நிகழ்வாக சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்துக்கொள்ளுவதற்கு வசதியாக திருச்செந்தூருக்கு நேற்று முதல் சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.
Also read: Cyclone Montha: வங்கக் கடலில் உருவானது மோன்தா புயல்..




ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சஷ்டி திதியில் நடைபெறும் சூரசம்ஹார விழா திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, முருகன் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கந்த சஷ்டி விழா தொடங்கிய முதல் நாளிலிருந்து 7 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹாரம் மற்றும் அதன் அடுத்த நாளான சப்தமி திதி திருக்கல்யாண நிகழ்வில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
அந்தவகையில், கந்தசஷ்டி விழா தொடங்கியது முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விரதம் மேற்கொண்டுள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. கோவில் கலையரங்கில் காலையும், மாலையும் பக்தி சொற்பொழிவுகள் நடைபறுகின்றன. திருச்செந்தூர் கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக 4,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Also read: ‘எதிரியா இருக்க தகுதி வேணும்’ அஜித் வசனத்தைச் சொல்லி விஜய்யை விமர்சித்த சீமான்!
மேலும், சூரசம்ஹாரத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பும் பக்தர்களுக்காக இன்றிரவே சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.