நூலக புத்தக கொள்முதல் முறைகேடு.. அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Agalvilakku Publications bank account frozen: நூலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, நவ.10: தமிழகத்தில் உள்ள மண்டல நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு விவகாரம் நீதித்துறையில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கும் போது வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இணையதளம் மூலம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், பள்ளி கல்வித்துறை செயலாளர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியுள்ளதாகவும் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு.. அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள்:
வழக்கு விசாரணையின் போது, கோவை பெரியார் அறிவுலக நூலகம் உள்ளிட்ட பல்வேறு மண்டல நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்குவதற்குப் பரிந்துரை செய்தது யார் என்ற முக்கியக் கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். குற்றவாளி யார் என்று உடனடியாகத் தெரியாவிட்டாலும், இது போன்ற முறைகேடு புகார்கள் எழும் போது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தனர். மேலும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து யார் யாருக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை என்ன விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் நீதிபதிகள் விளக்கம் கோரினர்.
அகல்விளக்கு பதிப்பக வங்கிக் கணக்கு முடக்கம்:
புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படாததைக் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உடனடியாக அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முழுமையாக முடக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முறையான வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். பதிப்பகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றங்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்த முழுமையான தேதிவாரியான விவரங்களைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரளையை மறுநாள் காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தனர். நூலகப் புத்தக கொள்முதல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி வேட்டை.. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 222 பேர் பிடிப்பு.. 36 பேர் கைது!!
பெருமாள் முருகனின் ஆய்வும் முறைகேட்டின் வெளிப்பாடும்:
இத்தகைய புத்தக கொள்முதல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு முக்கியக் காரணமாக, கோவை பெரியார் அறிவுலக நூலகத்தைப் பார்வையிட்ட பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் அங்குள்ள நூல்களின் தரம் மற்றும் கொள்முதல் முறை குறித்துத் தனது கடுமையான வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் பிறப்பித்த வெளிப்படையான கொள்முதல் வழிமுறைகளைக் காற்றில் பறந்துவிட்டு முறைகேடான முறையில் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பதிவுகள் விவாதமானதைத் தொடர்ந்தே, இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.