AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தை வாட்டும் வெயில்… நீலகிரியில் கொட்டிய கனமழை…

Tamil Nadu Weather: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலையால் தொண்டியில் அதிகபட்சமாக 40.7° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். ஜூலை 11 ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தை வாட்டும் வெயில்… நீலகிரியில் கொட்டிய கனமழை…
கோப்புப் புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 07 Jul 2026 14:17 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நீடித்தது. இருப்பினும், ஒருசில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் முற்றிலும் வறண்ட சூழலே காணப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி பகுதியில் அதிகபட்சமாக 40.7° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கோயம்புத்தூர் விமான நிலைய பகுதியில் 23.6° செல்சியஸும், மலைப் பிரதேசமான கொடைக்கானலில் 12.4° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

நீலகிரியைப் பதம் பார்த்த கனமழை

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக வறண்ட வானிலை நிலவினாலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைக் கிராமங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பார்வூட் மற்றும் செருமுள்ளி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 83.0 மில்லிமீட்டர் (8 சென்டிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இதேபோல் வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டரும், அவலாஞ்சி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் 7 சென்டிமீட்டரும் மழை கொட்டியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை, சின்னக்கல்லார் மற்றும் சோலையார் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 2 முதல் 3 சென்டிமீட்டர் வரை மிதமான மழை பதிவாகி குளுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு குஜராத் முதல் கேரளா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை

சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத் பகுதியிலிருந்து மத்திய கேரளா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்று (ஜூலை 7) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை மற்றும் நாடி மறுநாள் (ஜூலை 8, 9) ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மின்னல் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 10 அன்று தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழையும், ஜூலை 11-ல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தொடர்ந்து ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலையே பெரும்பாலும் காணப்படும்.

இயல்பை விட அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்

மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (ஜூலை 11 வரை) வெயிலின் அளவு குறைய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மாறுபாடுகள் காரணமாக, பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படலாம். இதனால் பகல் நேரங்களில் புழுக்கமும், வெப்பத்தின் தாக்கமும் சற்று கூடுதலாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தலைநகர மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். நகரின் சில குறிப்பிட்ட இடங்களில் லேசான மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். நாளை (ஜூலை 8) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பு குறைவு தான். வெப்பநிலையானது அதிகபட்சமாக 38° செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

Follow Us