நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!
Heavy rain in nellai: பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
நெல்லை, நவம்பர் 25: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, இன்றைய தினமும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட மக்களிடையே, கடந்த 2023 ஏற்பட்ட அளவுக்கு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த அளவுக்கு குறுகிய காலக்கட்டத்தில் அப்பகுதிகளில் பெருமளவு மழை பெய்துள்ளது. கடந்த முறை வெள்ளம் ஏற்பட்டதும், இதுபோல் குறுகிய காலக்கட்டத்தில் அதிகளவு மழை பெய்ததே முக்கிய காரணமாக இருந்தது. அதனால், மீண்டும் அந்தநிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மாவட்ட மக்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
கொட்டித்தீர்த்த கனமழை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளன. சேரன்மாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.




இடிந்து விழுந்த வீடுகள்:
இதனிடையே, நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்தவகையில், நெல்லை டவுனில் – 1 வீடு, பாளையங்கோட்டையில் – 2 வீடுகள், மானூரில் – 2 வீடுகள், சேரன்மகாதேவியில் – 6 வீடுகள், அம்பாசமுத்திரத்தில் – 1 வீடு, நாங்குநேரியில் – 2 வீடுகள், திசையன்விளையில் – 1 வீடு என மொத்தமாக 15 வீடுகள் ஒரேநாளில் விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணைகள் நிரம்பும் தருவாயில் இருப்பதால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகள், ஊர்ப்பகுதிகளில் பெய்து வரும் மழைநீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தவாறு செல்கிறது. மேலும் அங்கு செல்லும் நடைபாலத்தையும் மூழ்கடித்தது.
மேலும் படிக்க: உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
வெள்ள அபாய எச்சரிக்கை:
இந்த நிலையில், காரையாறு, சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையம் மூலமாக பொதுமக்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.மழை பாதிப்பு தொடர்பாக 1077, 0462 250 1070, 97865 66111 ஆகிய அவசர எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.