உருவாகிறது புயல்.. இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. பள்ளிகளுக்கு விடுமுறை வாய்ப்பு?
Heavy rain: காற்றடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நவம்பர் இறுதி வரை தென் மாவட்டம், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், நவ.29, 30ம் தேதிகளில் சென்னைக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. புயல் நிலை குறித்து இன்று தெரியவரும்.
சென்னை, நவம்பர் 25: வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்தால், புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுவதால், இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
வலுவான புயலாக மாறுமா?
இதோடு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நீடிப்பதால், இன்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில், அந்தமான் அருகில் காணப்படும் சுழற்சி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், குமரிக் கடல் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இணைந்து, வலுவான புயலாக மாறுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.




தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்:
புயல் குறித்த முன்னேற்றம், இன்று அல்லது நாளை தெரியவந்துவிடும். எனினும், தென் மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதிக கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்:
அந்தவகையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்.. கால நீடிப்பு கிடையாது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வர எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை?
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் நேற்றைய தினம் மிக கனமழை பெய்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்றும் தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.