சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகை… – இனி காற்று மாசுபாட்டை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்
Chennai Air Quality: டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக சென்னை மாநகராட்சி காற்றின் தரம் குறித்து தெரிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கவுள்ளது.
சென்னை, ஜனவரி 18 : சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை (Air Polution) கட்டுப்படுத்தவும், காற்று மாசுபாடு தொடர்பாக பொதுமக்களுக்கு உடனடி தகவல்களை வழங்கவும் சென்னை மாநகராட்சி ரூ.6.36 கோடி செலவில் நகரம் முழுவதும் 100 இடங்களில் டிஜிட்டல் காட்சிப்பலகைகள் அமைக்கும் மெகா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் காற்றுத் தர குறியீடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும். திட்டத்தின் முதல் கட்டமாக ரிப்பன் கட்டிடம் நுழைவாயிலில் முதல் டிஜிட்டல் பலகை நிறுவப்பட்டுள்ளது. மீதமுள்ள பலகைகள் அனைத்தும் பிப்ரவரி மாத இறுதிக்குள் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிறுவப்பட உள்ளன.
காற்று மாசுபாடு மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் காட்சிப்பலகைகள் மூலம் காற்றில் உள்ள தூசி அளவு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள், காற்றின் வேகம், மழைப்பொழிவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தகவல்கள் நேரடியாக காட்சிப்படுத்தப்படும். இதற்காக மொத்தம் ரூ.6.36 கோடி செலவிடப்படுகிறது.
இதையும் படிக்க : சென்னை உலா பேருந்து…நேர அட்டவணை-பயணிக்கும் வழித்தடம் வெளியீடு!




கோடம்பாக்கம் பகுதியில் மோசமாக பதிவான காற்றின் தரம்
சமீப நாட்களில் சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவான நிலையில், நள்ளிரவு முதல் காலை நேரம் வரை AQI அளவு ஆபத்தான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரிய உதயத்திற்கு பிறகு காற்றுத் தரம் சற்று மேம்பட்டாலும், நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் சூழல் தொடர்ந்தது.
இந்த புதிய டிஜிட்டல் கண்காணிப்பு பலகைகள் மூலம் மக்கள் தங்களின் சுற்றுப்புற காற்றுத் தரத்தை எளிதாக கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ கட்டுமான பணிகள் அதிகரிப்பதே காற்று மாசுபாட்டின் முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த வசதியை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதையும் படிக்க : தை அமாவாசை….ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்த பொது மக்கள்…கோயில்களில் சிறப்பு வழிபாடு!
டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து மழை, வெயில் போன்ற காலநிலை தகவல்களைப் போல இனி காற்று மாசு தொடர்பான தகவல்கள் தெரந்துகொள்வதும் அத்தியாவசியமாகிறது.