Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தை அமாவாசை….ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்த பொது மக்கள்…கோயில்களில் சிறப்பு வழிபாடு!

2026 Thai Amavasai: தமிழகத்தில் தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்காக குவிந்தனர். அவர்கள் அருகில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர் .

தை அமாவாசை….ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்த பொது மக்கள்…கோயில்களில் சிறப்பு வழிபாடு!
ராமேஸ்வரத்தில் தை அமாவாசை வழிபாடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 18 Jan 2026 10:29 AM IST

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18) தை அமாவாசை நிகழ்வு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, மகாளாய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நிகழ்வுகளில் பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொள்வது வழக்கமாகும். அதன்படி, தை அமாவாசையான இன்று, இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை ( ஜனவரி 17) இரவு முதலே வருகை தர தொடங்கினர். அதன்படி, இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

இதைத் தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக ராமநாதசாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தில் ஏராளமான பொது மக்கள் குவிந்திருப்பதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் வருகிறது புதிய தொழில்நுட்பம்…இனி வாகனங்கள் விரைந்து செல்லலாம்!

தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பொது மக்களின் வசதிக்காக சென்னை, சேலம், ஈரோடு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. இதே போல, திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, பாபநாசத்திலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு எள் மற்றும் மாவு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

 

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கண்காணிப்பு

இதைத் தொடர்ந்து, பாபநாசநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீராடும் பொதுமக்கள் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தீயணைப்பு துறை வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதே போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபாடும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா…இன்றுடன் நிறைவடைகிறது கால அவகாசம்!