தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!
Ban for Almont-Kid syrup: தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை மீறி இந்த மருந்தை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மருந்து குறித்து, 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.
சென்னை, ஜனவரி 17: தமிழகத்தில் குழந்தைகளுக்கு இருமலுக்கு பயன்படுத்தப்படும் ‘அல்மான்ட் சிட்’ சிரப்பை விற்க தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. ‘டையெத்திலின் கிளைக்கால்’ நச்சு பொருள் கலந்திருப்பதால் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றுக்கு, ‘லிவோசிட்ரசின் மற்றும் மான்டிலூகாஸ்ட’ ஆகிய மருந்து கலவைகள் கொண்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. எனவே, குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
இதையும் படிக்க: காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!
சிறுநீரகத்தை பாதிக்கும் ரசாயனம்:
இந்நிலையில், பீகார் மாநிலம் ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவனத் தயாரிப்பான ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகத்தைப் பாதிக்கும் ‘டையெத்திலீன் கிளைக்கால்’ அதிக அளவு இருப்பது தெரியவந்தள்ளது. இந்த ரசாயனம் கலந்த மருந்தை உட்கொண்டால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சோதனை மேற்கொண்ட கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, ‘அல்மான்ட் கிட்’ சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், உடனடியாக இந்த மருந்துக்கு தடை விதித்து உத்தரவிட்டன.
புதுச்சேரியிலும் தடை விதிப்பு:
இதைத்தொடர்ந்து, புதுச்சேரியிலும் அண்மையில் இந்த ‘அல்மான்ட் கிட்’ மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாநில மருத்து தர கட்டுப்பாடு ஆணையம் பிறப்பித்த உத்தரவில், அல்மான்ட் கிட் சிரப்பில் எத்திலின் கிளைகோலின் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், மேற்கூறிய அந்த சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுகொண்டது. அதோடு மருந்து விநியோகஸ்தர்கள், மருத்துக்கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும், இருப்பில் உள்ள மருத்துகளை உடனடியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அணுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் ‘அல்மான்ட் கிட்’ மருந்துக்கு தடை:
இந்நிலையில், தற்போது தமிழக அரசும் ‘அல்மான்ட் கிட்’ மருந்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி இந்த மருந்தை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மருந்து குறித்து, 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.
இதையும் படிக்க: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..
கோல்டிரிப் மருந்துகளுக்கு தடை:
ஏற்கெனவே, மத்திய பிரதேசத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்த ‘கோல்டிரிப்’ இருமல் சிரப்களை குடித்ததால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது. இந்த கோல்ட்ரிப் மருந்துகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்த மருந்துகள் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.