AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!

ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் 40 நாட்களே ஆகியுள்ள நிலையில், போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்கி, அதனை முதன்மைத் துறையாக மாற்றுவதற்கான வேலைகள் முதல்வர் ஆலோசனையின்படி நடந்து வருகின்றன. மகளிர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கான இலவச பயணத் திட்டம்' மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!
ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Jun 2026 12:57 PM IST

சென்னை, ஜுன் 27: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த முக்கிய கட்டமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது. தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்து, வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: நிதி, மின்சாரத்தைத் தொடர்ந்து வேளாண் துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’.. தவெக அரசின் அடுத்த அதிரடி!!

வருவாய் பெருக்கத்திற்கான திட்டங்கள்:

இதற்காக, ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு மேல் முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்களும், அரசுச் செயலாளர்களும் முழுமையான தரவுகளுடன் பங்கேற்க வேண்டும் எனப் பறந்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் சட்டப்பேரவையில் உரியப் பதிலடி கொடுக்க நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட அமைச்சர்களும் தயாராகி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் டெக்னாலஜி புரட்சி:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில், வெளிநோயாளிகளுக்கான ‘ஓபி சீட்’ வாங்குவதற்குப் பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து நிற்கும் நிலை இருந்து வந்தது. பொதுமக்களின் இந்த சிரமத்தைக் குறைக்கும் வகையில், தற்போது க்யூஆர் கோடு (QR Code) மூலம் ஸ்கேன் செய்து எளிதாக ஓபி சீட் பெறும் புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்டமாகப் பொதுமக்கள் தங்களது மொபைல் மூலமாகவே ஓபி சீட்களைப் பெறும் வகையில், விரைவில் பிரத்யேக மொபைல் செயலி ஒன்றைத் தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

மகளிருக்கு அனைத்துப் பேருந்துகளிலும் இலவசம்:

தொடர்ந்து, தமிழகப் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) தனியார் கட்டடங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், “ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் 40 நாட்களே ஆகியுள்ள நிலையில், போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்கி, அதனை முதன்மைத் துறையாக மாற்றுவதற்கான வேலைகள் முதல்வர் ஆலோசனையின்படி நடந்து வருகின்றன. மகளிர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கான இலவச பயணத் திட்டம்’ மிக விரைவில் முதல்வர் விஜய் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

இதையும் படிக்க: திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்:

இதனிடையே, தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் ஒருங்கிணைப்பதற்காக, புதிய சிறப்பு பிரதிநிதியாகப் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த தமிழர் அல்லாத ஒருவர் இந்த பொறுப்பான பதவியில் நியமிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக முதல்வர் விஜய் தனது முடிவை மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Follow Us